கூட்டமைப்பை பலப்படுத்தும் கோரிக்கை? Elanadu Editorial

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேசிய மகாநாட்டின் போது, கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

குறித்த மகாநாட்டில் பங்குகொண்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் துணைத் தலைவர், சீ. வீ. கே. சிவஞானம், கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகிறார் என்று தெரிவித்திருக்கிள்றார்.

கேள்வி – கூட்டமைப்பை உடைப்பதற்கு வெளியிலிருந்து முயற்சிகளை செய்யுமளவுக்கு, கூட்டமைப்பு கட்டுக்கோப்பாகவும், பலமாகவும் இருக்கின்றதா? எதிரிக்கு சவாலாக இருக்கும் ஒரு கட்சி தொடர்பில்தானே எதிரிகள் அச்சம் கொள்வார்கள் – மற்றவர்கள் அச்சப்படுமளவுக்கு கூட்டமைப்பின் செயல்பாடுகள் இருக்கின்றனவா? தன்னைத்தானே சிதைத்துக் கொள்ளும் ஒரு தேர்தல் அரசியல் கூட்டை, எதற்காக மற்றவர்கள் உடைக்க முயற்சிக்க வேண்டும்? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஓர் அரசியல் நோய் உண்டு. அதாவது, சிங்களவர்கள் தமிழ்த் தேசிய சக்திகளை பிளபுபடுத்த முயற்சிப்பதாகப் பலரும் அவ்வப்போது புலம்புவதுண்டு. தங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் போகும் போதுதான், இவ்வாறான புலம்பல்கள் எட்டிப்பார்க்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுக்கோப்புடனும், தெளிவான இலக்குடனும் இருந்தால், அதனை மற்றவர்களால் உடைத்துவிட முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதன் மூலம், அதனை ஒரு பலமான தேசிய அரசியல் இயக்கமாக வளர்க்க வேண்டுமென்னும் கோரிக்கை 2011இலிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நடந்ததோ வேறு, 2010இல், இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை காரணமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

கொள்கை அடிப்படையிலான முரண்பாடாக அவர்கள் கூறிக் கொண்டாலும்கூட, கூட்டமைப்பிலுள்ளவர்கள், இட ஒதுக்கீடடில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாகவே கஜேந்திரகுமார் வெளியேறினாரெனக் கூறுகின்றனர்.

ஏனெனில், இரா.சம்பந்தன், விடுதலைப் புலிகளால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிலருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கவில்லை.
பிறிதொரு பங்காளிக் கட்சியான, சுரேஷ் பிறேமச்சந்திரன், 2015, பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தனர்.
சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கு தேசிய பட்டியல் மூலம் ஓர் ஆசனத்தை வழங்குவதன் மூலம், ஈ. பி. ஆர். எல். எவ்வை தொடர்ந்தும் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளும் ஆலோசனையை பங்காளிக் கட்சிகள் நிராகரிக்கவில்லை.

ஆனால், சம்பந்தன் அந்த யோசனையை மறுதலித்திருந்தார்.

2013இல், கூட்டமைப்பால், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்கப்பட்ட, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய கட்சி ஒன்றின் மூலம் தனிவழியில் சென்றார்.

மேற்படி விடயங்களுக்கு பின்னால் மற்றவர்களா இருந்தனர் அல்லது விடயங்களை சரியாகவும் நேர்மையாகவும் கையாளமையின் காரணமாக இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றனவா? கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்று சிந்திப்போர் முன்னைய அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதேபோன்று கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்புக்கு மாற்றான அரசியலை நேர்மையாகவும் முறையாகவும் ஒழுங்காகவும் முன்னெடுக்கவில்லை.

அடிப்படையில் ஒரு விடயம் மட்டும் சரியாகவும் முறையாகவும் நடந்திருக்கின்றது.
அதாவது, தமிழ்த் தேசிய அரசியலை அனைவருமாக ஒன்றிணைந்து சிதைத்திருக்கின்றனர்.
கூட்டமைப்பின் சிதைவில் தமிழ் அரசு கட்சியே பிரதான பங்குவகித்திருந்தது.

ஏனெனில், கூட்டமைப்பை பதிவு செய்யும் கோரிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் அரசு கட்சியே எதிர்த்து வந்திருக்கின்றது. முக்கியமாக அதன் தலைமை. ஆனால், இறுதியில் தமிழ் அரசுக் கட்சியைக்கூட அவர்களால் கட்டுக்கோப்புடன் பாதுகாக்க முடியவில்லை. தமிழ் அரசு கட்சியின் தலைவரை தேர்தலில் தோற்கடிப்பதற்கு கட்சிக்குள்ளேயே வியூகங்கள் வகுக்கப்பட்டது.

இறுதியில் தமிழ் அரசு கட்சியும் பலவீனமடைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலவீன மடைந்திருக்கின்றது.

கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கான காலம் அதிகம் கடந்து விட்டது.
எனினும், இப்போது முயற்சிப்பதில் தவறில்லை. ஏனெனில், கூட்டமைப்பின் முற்றிலுமான சிதைவு என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் மூச்சு விடுவதற்கே கடினமான சூழலை ஏற்படுத்தலாம்.

கூட்டமைப்புக்கு மாற்றான கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் எவருமே, தமிழ்த் தேசிய அரசியலை முன்கொண்டு செல்லும் ஆற்றலோடு இல்லை.