வவுனியா, திருகோணமலை, மன்னார் நகரசபைகளை மாநகரசபைகளாக்க தீர்மானம் : கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசசபைகள் நகரசபைகளாகின்றன – பந்துல

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மொனராகலை பிரதேசசபைகளை நகரசபைகளாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (9) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் உள்ளுராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவரால் முன்வைக்கப்பட்ட யோசனையில் 7 நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் 24 மாநகரசபைகளும் , 41 நகரசபைகளும் , 276 பிரதேசசபைகளும் காணப்படுகின்றன. அதற்கமைய 341 உள்ளுராட்சி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வருகின்றன.

குறித்த பிரதேசங்களில் ஏற்படுகின்ற சனத்தொகை மாற்றம் , அடிப்படை வசதிகளில் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கவனத்திற் கொண்டு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , அதே போன்று கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மொனராகலை பிரதேசசபைகளை நகரசபைகளாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்து , அவற்றில் பிரதேசசபைகள் , நகரசபைகள் மற்றும் மாநகரசபைகளாக மாற்றப்படக் கூடியவை தொடர்பில் பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார் என்றார்.