சீனாவில் இருந்து மீளவும் நேரடி விமான சேவைகள் – ஹரின் பெர்னாண்டோ

சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம், சீன தேசிய சுற்றுலா பயணிகளை சிறிலங்காவிற்கு அழைத்து வர தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பில் உறுதியளித்துள்ளதாக சுற்றுலா மற்றும் காணி விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனக் குடியரசில் சுற்றுலா சேவைகளை வழங்கும் பிரதான அமைப்பான சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம் உள்ளிட்ட குழுவினர் சிறிலங்காவிற்கு வருகை தந்த போது சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு முன்பு இருந்ததைப் போலவே சீனாவிலிருந்து நேரடி விமான சேவைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனாவில் இதுவரை விமான சேவைகளை ஆரம்பிக்காத விமான நிறுவனங்களை அழைக்க முன்மொழிவொன்றை முன்வைத்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைவாக, சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம், பிரதான குழுவின் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.