தமிழ்க்கட்சிகள் எழுதும் கடிதங்கள்? – நிலாந்தன்

அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அக்கடிதங்கள் அக்காலகட்ட அரசியலில் ஏதும் விளைவுகளை ஏற்படுத்தினவோ இல்லையோ, அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார்.அவை சிலசமயங்களில் துணிச்சலான,பல சமயங்களில் சுவாரசியமான அல்லது பம்பலான அரசியல் ஆவணங்களாகப் பார்க்கப்பட்டன.

இப்பொழுது ஆனந்தசங்கரியிடம் இருந்து ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் அதைக் கற்றுக்கொண்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. அண்மை நாட்களாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட  கட்சிகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு கடிதங்களை எழுதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மனோ கணேசன் தனது கட்சி அவ்வாறு கடிதம் எழுதப்போவதில்லை என்று கூறுகிறார். இந்தியாவுக்கு இங்குள்ள பிரச்சினை விளங்கும். ஆகவே கடிதம் எழுதி அதன் மூலம் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக இடம்பெறுவதை விரும்பவில்லை என்று மனோ கணேசன் கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் 21 ஆம் தேதி இந்தியாவுக்கு செல்கிறார்.அங்கே அவர் இந்திய பிரதமரை சந்திப்பதற்கிடையில் தமிழ்க் கட்சிகளின் மூன்று கடிதங்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பப்படுகின்றன. முதலாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது.அக்கடிதம் எற்கனவே ஊடங்களுக்குத் தரப்பட்டுவிட்டது. இரண்டாவது சம்பந்தருடையது. மூன்றாவது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரனின் கட்சிகளுடையது.

இக்கடிதங்களின் உள்ளடக்கம் என்னவென்பது ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்துவிட்டது.அந்த உள்ளடக்கங்களை தொகுத்து பார்த்தால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக தெரிகிறது.

இரண்டாவது கடிதம் தமிழரசுக் கட்சியுடையது. இந்தியாவுக்கு ஆறு கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கடிதம் எழுதியபொழுது அதில் தமிழரசு கட்சியும் கையொப்பமிட்டது.கடிதத்தின் உள்ளடக்கத்தை மாற்றுவதில் தமிழரசுக் கட்சி முக்கிய பங்காற்றியது.அக்கடிதம் 13க்குள் முடங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி அதற்குப்பால் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழரசு கட்சி ஏற்படுத்தியது.ஆனால் இப்பொழுது தமிழரசு கட்சி தனியாக ஒரு கடிதம் எழுதுகிறது.அக்கடிதமானது 13 வது திருத்தத்தை கடந்து சென்று ஒரு சமஸ்டி கோரிக்கையை-கூட்டாட்சிக்  கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறப்படுகிறது.இதுவிடயத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வரைந்த கடிதத்தை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.அக்கடிதத்தில் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே,தமிழரசுக்கட்சி தனியாக ஒரு கடிதத்தை எழுதப்போவதாக அறிவித்துள்ளது.

மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது. அப்படி ஒரு கடிதத்தை எழுதப்போவதாக முதலில் சொன்னது அக்கட்சிதான்.தமது கடிதத்தை முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதும் அக்கட்சிதான்.அக்கட்சி இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் மிகத்தெளிவாக 13வது திருத்தத்தை நிராகரிக்கின்றது.அதேபோல மிகத்தெளிவாக கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைக்கின்றது,மேலும் கடிதத்தின் இறுதி வரியில் “இந்தியாவின் சட்டபூர்வமான  பிராந்திய பாதுகாப்பு நலன்களை”அக்கட்சி ஏற்றுக் கொள்வதை கடிதம் மீள வலியுறுத்துகின்றது.

இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு  நலன்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அந்த அடிப்படையில் இந்திய இலங்கை உடன்படிக்கையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அக்கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.அதேசமயம் அந்த உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அக்கட்சி தெளிவாகக் கூறிவிட்டது.

இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சி இந்தியாவைப் பகை  நாடாகப் பார்க்கமுடியாது.ஆனால் நடைமுறையில் முன்னணியானது, தனது அரசியல் எதிரிகளை விமர்சிக்கும்போது அல்லது தன்னை விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்களைத் தூற்றும்போது அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள்,கைக்கூலிகள்,துரோகிகள் என்றெல்லாம்  குற்றஞ்சாட்டுவதுண்டு.

தமது கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்திடம் கையளித்தபின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஊடகங்களுக்குத்  தெரிவித்த கருத்துக்களிலும் அது வெளிப்படுகின்றது. நடைமுறையில் இந்தியாவை ஒரு பகை நாடாகக் காட்டிக்கொண்டு, உத்தியோகபூர்வமாக இந்தியாவின் பாதுகாப்புசார் நலன்களைத்  தாம் ஏற்றுக் கொள்வதாக அக்கட்சி கூறுவதை, அகமுரண்பாடு என்று விளங்கிக் கொள்வதா? அல்லது உள்ளூரில் கட்சி மோதல்களில் வெளியுறவு நிலைப்பாடுகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்ற முதிர்ச்சி அந்தக்  கட்சியிடம் இல்லை என்று எடுத்துக் கொள்வதா?

இந்தியா ஒரு எதிரி நாடா அல்லது கையாளப்பட வேண்டிய ஒரு பிராந்தியப்  பேரரசா என்ற தெளிவு ஈழத்தமிழர்களுக்கு இருக்கவேண்டும்.பகைநாடு என்றால்,அதன் புவிசார் பாதுகாப்பு  நலன்களோடு சமரசம் செய்யத் தேவையில்லை.மாறாக,கையாளப்பட வேண்டிய ஒரு நாடு என்றால்,அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் பொருத்தமான ஒரு  வெளியுறவுத்  தரிசனம் இருக்கவேண்டும்.அந்த வெளியுறவுத் தரிசனம் உள்நாட்டில் எமது பேரபலம் எது?பிராந்தியத்தில் எமது பேரபலம் எது?உலக அளவில் எமது பேரபலம் எது? என்பது தொடர்பான தொகுக்கப்பட்ட ஆய்வுமுடிவுகளின்  அடிப்படையில் அமையவேண்டும்.உள்நாட்டுக் கொள்கைக்கு வெளியே வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று இருக்க முடியாது.

தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதுகின்றனவென்றால்,அதுவும் ரணில் அங்கு போகவிருக்கும் ஒரு பின்னணியில் மூன்றுகடிதங்கள் அனுப்பப்படுகின்றனவென்றால், இந்தியாவை ஏதோ ஒருவிதத்தில் கையாள வேண்டிய தேவை உண்டு என்று மேற்படி கட்சிகள் நம்புகின்றன என்று பொருள்.இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தவிர்க்கப்படவியலாத ; கையாளப்பட வேண்டிய ஒரு சக்தி என்பதை மேற்படி  கடிதங்கள் உணர்த்துகின்றன. ஆயின் இந்தியாவை கையாள்வதற்கு மேற்படி கட்சிகளிடம் எவ்வாறான வெளியுறவுக் கொள்கை உண்டு? அதற்கு வேண்டிய ஏதாவது நிபுணத்துவக் கட்டமைப்பு அவர்களிடம் உண்டா?

இல்லை.அப்படிப்பட்ட வெளியுறவுத் தரிசனங்கள் இருந்திருந்தால் ரணில் பிரதமர் மோடியை சந்திக்கப்போகும் ஒரு காலகட்டத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை விடவும் அதற்கு முன்னரே அதாவது ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் இருந்து தனக்கு அழைப்பு வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ; அதற்காக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அந்த இடையூட்டுக்குள் புகுந்து வேலை செய்திருக்க வேண்டும்.

ஆனால் எந்த ஒரு தமிழ்க்கட்சியும் அதைச் செய்யவில்லை. இப்பொழுது எதிர்த்தரப்பு முன்னெடுக்கும் ஒரு நகர்வுக்கு பதில்வினையாற்றும் நடவடிக்கையாகவே கடிதம் எழுதப்படுகின்றது.அதாவது ரியாக்டிவ் டிப்ளோமசி.

கடந்த ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபொழுது அதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது.டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு இந்தியா கூட்டமைப்பைக் கேட்டதாக அப்பொழுது தகவல்கள் வெளிவந்தன. ஜனாதிபதியாக வந்ததும் ரணில் இந்தியாவுக்குச் செல்வதற்கு இந்தியாவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதற்காக அவர் ஏறக்குறைய ஓராண்டு காலம் உழைக்க வேண்டியிருந்தது.இப்பொழுதுதான் அந்த அழைப்பு வந்திருக்கிறது.இவ்வாறு ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதிக்குள் தமிழ்க் கட்சிகள் தமது நோக்கு நிலையிலிருந்து எவ்வறான வெளியுறவுச் செயற்பாடுகளை “புரோ அக்டிவ் ஆக” முன்னெடுத்தன?

கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா கூட்டமைப்பை-அப்பொழுது கூட்டமைப்பாகத்தான் இருந்தது-டெல்லிக்கு வருமாறு அழைத்தது.ஆனால் சம்பந்தர் பொருத்தமற்ற  காரணங்களைக் கூறி அந்த அழைப்பை நிராகரித்தார். எந்தப் பேரபலத்தை வைத்து அப்படி ஒரு முடிவை எடுத்தார்? இன்றுவரையிலும் அவர் அதை யாருக்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.இந்தியாவின் அழைப்பை சம்பந்தர் நிராகரித்துவிட்டார்.அதன்பின் இந்தியா தமிழ்த் தலைவர்களை டெல்லிக்கு அழைக்கவில்லை.ரணில் ஜனாதிபதியாக வந்ததும் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு அவருக்கும் டெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லை.தமிழ்த் தலைவர்களுக்கும் அழைப்பு வரவில்லை.ஆனால் அரசுடைய தரப்பாகிய சிங்களத் தலைவர்கள் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவை வெற்றிகரமாகக்  கையாண்டு புதுடில்லியை நெருங்கி சென்று விட்டார்கள்.ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ்த் தரப்போ கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது?

ரணில் ஒரு புத்திசாலி தந்திரசாலி என்று தமிழர்கள் கூறிக் கொள்ளுகிறார்கள். அப்படியென்றால் ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்கள் எப்படிப்பட்ட தந்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்? ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிசபைத் தேர்தலை அறிவித்தபொழுது அதை நம்பி சுவரொட்டிகளை அடித்த தமிழ்க் கட்சிகள்தானே? அதுவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு சுவரொட்டிக்கு பெருமளவு காசைச்  செலவழிக்க வேண்டியிருந்த  ஒரு பின்னணியில், ரணிலின்   அறிவிப்பை நம்பி தமிழ்க் கட்சிகள் சுவரொட்டிகளை அடித்தன.அல்லது நட்டப்பட்டன என்றும் சொல்லலாம். இப்பொழுது அவர் டெல்லிக்கு போகிறார் என்றதும் ஆனந்தசங்கரியை போல கடிதம் எழுதத் தொடங்கி விட்டார்களா?