தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி இலங்கையில் தமிழர்களின் வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.