திருகுமார் நடேசனால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் – பா. உ. சமிந்த விஜேசிறி

பன்டோரா பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்ட சொத்து பதுக்கல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியதால், திருகுமார் நடேசனால் தனக்கு உயிர் அச்றுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இது தொடர்பில் சபாநாயகர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற(21) அமர்வில் கலந்துகொண்ட சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், பன்டோரா பத்திரிகைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்த சொத்து பதுக்கள் தொடர்பில்  கடந்த பாராளுமன்ற அமர்வில் நான் உரையாற்றியிருந்தேன். இது தொடர்பில் கடந்த 11ஆம் திகதி எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் யார் என கேட்டேன். திருகுமார் நடேஷன் என அவர் கூறினார் என்றார்.

எனக்கு விளங்கவில்லை என்பதால் மீண்டும் யார் என்று கேட்டேன் திருகுமார் நடேசன் என்றே பதில்வந்தது. ”பன்டோரா பத்திரிகையில் வெளிவந்த சொத்து பதுக்கல் தொடர்பில் நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தீர்கள்.” என சிரித்தபடியே கூறி அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்தார்.

இந்த தொலைபேசி அழைப்பை எனக்கு விடுக்கப்பட்டுள்ள உயிரச்சுறுத்தலாகப் பார்க்கிறேன். நான் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் இதுபோன்ற விடயங்களை நாம் பேச வேண்டும். திருடனை திருடன் என கூறுவதில் எனக்கு பயமில்லை என்றார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பானவர் என்றரீதியில், சபாநாயகர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.