தேர்தலுக்கான கால எல்லைகளை குறைப்பதற்கு அரசாங்கம் ஆலோசனை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லையை குறைக்குமாறு அரசாங்கம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஆலோசணை வழங்கியுள்ளது. இதற்கான திட்ட வரைபை  உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உட்பட மேம்பட்ட தேர்தல் முறைமைகளை கொண்ட நாடுகளை உதாரணமாக கொண்டு, வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லையை குறைக்கும் திட்டத்தை கால தாமதமன்றி தாயாரிக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்கவுக்கு  ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் ஒன்றை நடத்துவதாயின் அதற்கான கால எல்லை நீண்டதாக உள்ளது. இதனால் அநாவசியமன செலவீணங்கள் அதிகரிக்கின்றன. இதனை கவனத்தில் கொண்டே தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மறுப்புறம் தேர்தலை அறிவித்த பின்னர் அரசாங்கத்தின் மொத்த கட்டமைப்பும் சுயாதீனமான தேர்தலுக்காக செயல்பட ஆரம்பிக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில், வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லை மிக நீண்டதாக காணப்படுகின்றமையினால் அரச செலவீணம் பெரும் சுமையாகுகின்றது. மேலும் மக்களின் அன்றாட வாழ்வுக்கும் நெருக்கடியாகின்றது.

அதே போன்று பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மெதுவாக நாடு முன்னேற்றமடைந்து வருகின்றமையினால்  செலவீணங்களை குறைப்பது இந்த காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். எனவே தேர்தல் நடத்துவதற்கான கால எல்லையை குறைக்கும் திட்டம் குறித்து ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் முறைமை குறித்து அங்கு சென்று ஆராய்ந்து இலங்கைக்கு ஏற்புடைய திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு  தயாரிக்க வேண்டும். அத்துடன், அதற்கான ஒத்துழைப்புகளை ஜனாதிபதி செயலகம் வழங்கும் என்றும் தெரிவித்தார்.