ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் – தேர்தல் ஆணையாளர் உறுதி

ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய ரத்நாயக்க,

2019 நவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைவதாக தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலம் மாறாது என அவர் விளக்கினார்.

சட்டத்தின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலை குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பு என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை இலங்கைவின் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோருமெனவும், இதற்கமைய ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி சபைத் தேர்தல்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேட்பு மனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க வேண்டும்.நிதி நெருக்கடி காரணமாக இம்முறை வாக்காளர் பதவி உள்ளிட்ட சகல பணிகளும் தாமதமடைந்தன. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் இறுதிக் கட்டத்தில் நிதி விடுவிப்பு முடக்கப்பட்டதால் தேர்தல் வாக்கெடுப்பு எப்போது இடம்பெறும் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் ரோஹன பண்டார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்ற நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3000 அரச சேவையாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு அரச நிர்வாகம் அமைச்சின் ஊடாக தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தின் 120 ஆவது பிரிவின் பிரகாரம் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும் அரச சேவையாளர் ஒருவர் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் வரை அரச சேவையில் ஈடுபட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எம்மால் செயற்பட முடியாது.

அத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. இவ்விடயம் குறித்து சகல கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்று குறிப்பிட முடியாத நிலை காணப்படுவதால் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பு மனுக்கலை இரத்து செய்வதற்கு முன்னர் தேர்தல் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ள நிதியை பெற்றுத்தாருங்கள் என்று வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

தேர்தல் நடத்தப்படாமையால் இலங்கையின் ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு விழுந்த பாரிய அடி என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒன்றையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களின் கட்டுப்பாடின்றி, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், ஆளுநர்கள், செயலாளர்கள், ஆணையாளர்கள் நடத்தும் இந்த ஆட்சி சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கான கால எல்லைகளை குறைப்பதற்கு அரசாங்கம் ஆலோசனை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லையை குறைக்குமாறு அரசாங்கம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஆலோசணை வழங்கியுள்ளது. இதற்கான திட்ட வரைபை  உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உட்பட மேம்பட்ட தேர்தல் முறைமைகளை கொண்ட நாடுகளை உதாரணமாக கொண்டு, வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லையை குறைக்கும் திட்டத்தை கால தாமதமன்றி தாயாரிக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்கவுக்கு  ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் ஒன்றை நடத்துவதாயின் அதற்கான கால எல்லை நீண்டதாக உள்ளது. இதனால் அநாவசியமன செலவீணங்கள் அதிகரிக்கின்றன. இதனை கவனத்தில் கொண்டே தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மறுப்புறம் தேர்தலை அறிவித்த பின்னர் அரசாங்கத்தின் மொத்த கட்டமைப்பும் சுயாதீனமான தேர்தலுக்காக செயல்பட ஆரம்பிக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில், வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லை மிக நீண்டதாக காணப்படுகின்றமையினால் அரச செலவீணம் பெரும் சுமையாகுகின்றது. மேலும் மக்களின் அன்றாட வாழ்வுக்கும் நெருக்கடியாகின்றது.

அதே போன்று பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மெதுவாக நாடு முன்னேற்றமடைந்து வருகின்றமையினால்  செலவீணங்களை குறைப்பது இந்த காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். எனவே தேர்தல் நடத்துவதற்கான கால எல்லையை குறைக்கும் திட்டம் குறித்து ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் முறைமை குறித்து அங்கு சென்று ஆராய்ந்து இலங்கைக்கு ஏற்புடைய திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு  தயாரிக்க வேண்டும். அத்துடன், அதற்கான ஒத்துழைப்புகளை ஜனாதிபதி செயலகம் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தேர்தல் ஒன்று இவ்வருடம் இடம்பெறும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல் அல்லது உள்ளூராட்சித் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களில் ஒன்று இந்த வருடம் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக ஜனநாயக தினமான செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழிவுகளை பரிசீலித்து மூன்றாம் வாரத்தில் எல்லை நிர்ணயம் குறித்து இறுதி அறிக்கை

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், விரைவில் அவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து, தமது முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்கு காலவகாசமும் வழங்கப்பட்டது.

குறித்த முன்மொழிவுகளை தேசிய எல்லை நிர்ணயக் குழு பரிசீலித்து குழுவின் இறுதி அறிக்கை இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 4,000 ஆகக் குறைக்கும் நோக்கத்துடன் 2020 இல் தேசிய எல்லை நிர்ணயக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், உள்ளூர் அளவில் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான திகதி நிச்சயமற்ற நிலையில் இருக்கும் அதேவேளை தம்மால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேர்தலை நடத்துவது குறித்த எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என இரண்டாவது தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது பேச யாரும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் உலக ஜனநாயக தினத்தில் நடத்தப்பட எதிர்பார்ப்பு

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்விலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையின் இறுதி வரைவு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுமாயின் தற்போதுள்ள நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized