தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து சார்ள்ஸ் விலக பஸிலே காரணம் : கொழும்பு ஊடகம் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் விலகியதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவே காரணம் என்று சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாட்களாக பொது அரசியலில் ஈடுபடாது இருந்து வந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, கந்தானை எனும் இடத்தில் தங்கியிருந்து பாரிய அரசியல் திட்டத்தை தயாரித்துள்ளதாக எமது ஊடகம் அறிந்துள்ளது.

அதற்கமைவாக, கந்தானையில் இருந்தே பஸில் கொழும்பில் உள்ள பல முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் பதவி விலகியதன் பின்னணியில் பஸிலின் நிழல் வீழ்ந்துள்ளதாக சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆனால், இது தொடர்பாக இது வரை முக்கியமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.