நடைமுறைச் சாத்தியமற்றவற்றைக் கோரி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பங்களை ஒழிக்க வேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோரி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முயற்சிகளையும் சந்தர்ப்பங்களையும் இல்லாதொழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வாக்கு வங்கிக்கான தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் ஆகிய தரப்புக்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது. ஆகவே அதுபற்றிய விடயங்களை முன்னெடுக்கும்போது எதிர்ப்புக்களை வெளியிடுவது பொருத்தமல்ல. அத்துடன், அத்திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற நிர்வாக சிக்கல்களை தீர்க்கும் வகையிலான திருத்தங்கள் பாராளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன.

அவ்வாறான நிலையில் வடக்கு அரசியல்வாதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோருவதில் பயனில்லை. அவ்வாறு அவர்கள் தொடர்ச்சியாக விடுக்கும் கோரிக்கையானது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்காது. மாறாக, அவை தொடர்ச்சியாக நீடித்துச் செல்லவே வழிசமைப்பதாக இருக்கும்.

அதேபோன்று தென்னிலங்கையில் வாக்கு வங்கிகளுக்காக கடும்போக்காளர்களாக தம்மை காண்பித்து, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களும் தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை குழப்பிவிடக்கூடாது.

வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் தற்போது வரையில் முழுமையான இருதரப்பு நம்பிக்கை ஏற்படுத்தப்படாமல் துருவப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலைமையையே முதலில் மாற்ற வேண்டும். அதற்காக ஜனாதிபதி முதற்கட்டமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில், இரு இன மக்களுக்கும் இடையில் புரிதலும் நம்பிக்கையும் ஏற்பட்டு நல்லிணக்கம் உருவாகின்ற தருணத்தில், மேலதிகமான விடயங்களை பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாமல், அரசியல் தரப்பில் உள்ளவர்கள் தமது நலன்களுக்காக அதி உச்சமான விடயங்களை விவாதித்துக்கொண்டிருப்பதானது சந்தர்ப்பத்தையும் காலத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும் என்றார்.