நீதித்துறையின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக நீதித்துறை மீது நிறைவேற்று அதிகாரம் கொடுக்கும் அழுத்தங்களிற்கு எதிராக போரிடப்போவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களின் தீர்ப்புகளை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெலிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள அவர் நிறைவேற்று அதிகாரம் நீதிபதிகளை அழுத்தத்திற்குள்ளாக்குவதற்கு சட்டத்துறையினர் அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏற்க மறுப்பதை நாங்கள் காண்கின்றோம் நீதிமன்ற தீர்ப்புகளை கடைப்பிடிக்காமலிருப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் நீதிபதிகள் மீது அழுத்தங்களை கொடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை நடத்தாமலிருப்பது என்ற ஜனாதிபதியின் முடிவை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள சாலியபீரிஸ் நீதித்துறை மீது அழுத்தங்களை கொடுப்பதற்காக நாடாளுமன்றத்தை பயன்படுத்துவது ஆரோக்கியமான விடயமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு எதிராக நாங்கள் போரிடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.