புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது – பந்துல

புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது. புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த வேண்டாம் என்றால் சேவையை நிச்சயம் அதிகார சபையாக மாற்றிமைக்க வேண்டும். திணைக்களம் என்ற நிர்வாக கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு  முன்னேற்றமடைய முடியாது என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டம் இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

போக்குவரத்து சேவைத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும், மாற்றத்தை ஏற்படுத்த மானியம் போதாது. புகையிரத திணைக்களத்தின் வருமானம், செலவு முகாமைத்துவத்தில் நிலவும் பலவீனத்தன்மை திணைக்களம் நட்டமடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது. சிறந்த நிர்வாக கட்டமைப்பு இல்லாமல் நிறுவனத்தை முன்னேற்ற முடியாது.

பொது போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அமைச்சரவை ஊடாக தீர்வு காண தயாராகவுள்ளேன். குறுகிய அரசியல் நோக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டங்களின் பங்குதாரர்களாக புகையிரத தொழிற்சங்கங்கள் ஆளாகக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

புகையிரத சேவையை திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் வைத்துக்கொண்டு ஒருபோதும் மேம்படுத்த முடியாது. திணைக்களம் எனும்போது வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. துறைமுக அதிகார சபை, டெலிகொம் நிறுவனம் ஆகியன அபிவிருத்தி அடைவதை போல் புகையிரத திணைக்களம் அபிவிருத்தியடைய வேண்டும்.

புகையிரத சேவையாளர்களின் தொழில் மற்றும் ஓய்வூதிய உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம் என்றால் நிச்சயம் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு முன்னேற முடியாது என்றார்.