பெண் எம்.பிக்களை அரச தரப்பு சபையில் இழிவுபடுத்தும் போது சபாநாயகர் சிரிப்பதா ? – ரோஹிணி குமாரி ஆவேசம்

பெண் எம்.பி.க்களை அமைச்சர்கள், அரச தரப்பு எம்.பி. க்கள் இழிவுபடுத்தும்போது சபாநாயகர் சிரித்துக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட எம்.பி ரோஹிணி குமாரி விஜேரத்ன, சபாநாயகருக்கும் மனைவி, பிள்ளைகள் இருப்பதனை மறந்து விடக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்த ரோஹிணி குமாரி விஜேரத்ன எம்.பி.மேலும் கூறுகையில்,

கடந்த பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது தலதா அத்துகோரல எம்.பி. உரையாற்றியபோது அவரை அமைச்சர்கள் சிலரும் அரச தரப்பு எம்.பி.க்கள் சிலரும் மிக மோசமாக இழிவு படுத்தினர். அருவருக்கத்தக்க கருத்துக்களை முன் வைத்தனர். இது பாராளுமன்றம். பெண்களை கேவலப்படுத்துவதற்கான இடமல்ல. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே பெண்களாகவுள்ள நிலையில் அவர்களினால் தமது கருத்துக்களைக்கூட சுதந்திரமாக முன் வைக்க முடியாத நிலையுள்ளது.

பெண் எம்.பி.க்களை அமைச்சர்கள், அரச தரப்பு எம்.பி. க்கள் இழிவுபடுத்தும்போது சபாநாயகராகிய நீங்கள் சிரித்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கும் மனைவி,பிள்ளைகள் இருப்பதனை மறந்து விடக்கூடாது என்றார்.

இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில், அந்த விடயம் தொடர்பில் நான் தேடிப்பார்க்கின்றேன் என்றார்.