கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 25 வருடங்களுக்கு மேலாக கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று கும்புறுமூலை இராணுவ முகாமில் நடைபெற்றது.இதில் 7 ஏக்கர் அரச காணியும் தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன,வீரசூரிய,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை,கிரான் பிரதேச செயலாளர்களான கோ.தனபாலசுந்தரம்,எஸ்.ராஜ்பாவு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த யுத்த காலத்தில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இவ் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 1980 காலப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்த காணியின் ஒரு பகுதியில் அரச அச்சக கூட்டுத்தாபனம் அமைந்திருந்தபோதிலும் அது செயல்படாத பட்சத்தில் விசேட அதிரடிப் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்தது.அக்காணியானது தற்போது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவ முகாம் அகற்றப்பட்டாலும் அப்பகுதியில் வழமைபோல் செயல்பட்டு வரும் வீதி சோதனைச் சாவடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது