முடக்கத்தால் வட-கிழக்கில் வருமானம் இழப்பு: முகவர்களின் மிரட்டல்களால் பலர் பாதிப்பு! ரெலோ மதுசுதன்

முடக்க காலங்களில் வருமானத்தை இழந்திருக்கும் நிலையில் லீசிங் கம்பனிகள் கட்டுப் பணத்தினைச் செலுத்த நிர்ப்பந்திப்பதாகவும், நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள் கடன் தவணைப் பணத்தைச் செலுத்த நிர்ப்பந்திப்பதாகவும் பலர் முறைப்பாடளிக்கின்றனர். வடக்கு- கிழக்கில் பெரும் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது என நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர் தொகுதி அமைப்பாளருமான குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் இன்று வியாழக்கிழமை(10) அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனங்களையும், சுயதொழில்களுக்காக கடன்,நுண்கடன் பெற்றவர்களுக்கும் அவர்களின் வருமானம் இல்லாத நிலையில் இந் நிறுவன முகவர்களின் மிரட்டல்களால் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர்.

பல முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலை தான். ஆகவே, அரசும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் இவ்வாறான நிதி மீள் அறவீடுகளுக்கு விலக்களிப்புச் செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு லீசிங், கடன் பெற்றோர் எழுத்து மூலம் உங்கள் நிலைமையை வெளிப்படுத்தி உங்கள் நிறுவனம் அல்லது வங்கியிடம் அறிவியுங்கள் .அது ஆவணமாகும். அதையும் மீறித் தொந்தரவு புரிந்தால் நீங்கள் நேரடியாக முறைப்பாடளிக்கலாம். எமது சட்டத்தரணிகள் இவ் விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார் .