அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு: சர்வதேச மன்னிப்புச்சபை

கொவிட் – 19 வைரஸ் பரவலின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதில் இலங்கை திணறிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி வழங்கலின்போது உரிய செயற்திட்டமொன்று பின்பற்றப்படவில்லை என தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

மேலும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம், நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

‘கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுப்பதில் திணறும் இலங்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மைக்காலத்தில் உலகளாவிய ரீதியில் அநேகமான நாடுகளில் முடக்கம் தளர்த்தப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படுவதுடன் இந்த நோய்த்தொற்றிலிருந்து அவை மீள்வதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இருப்பினும் இந்த கொவிட் – 19 வைரஸ் பரவலால் இன்னமும் தெற்காசிய நாடுகள் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றன. அந்த சவாலில் இருந்து விலகிச்செல்ல முடியாது என்பதை இலங்கை நிரூபித்திருக்கிறது. இலங்கையில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பின்பற்றப்படும் செயற்திட்டம், தேவையானளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சவால் மற்றும் தடுப்பூசி வழங்கலின்போது தொற்றினால் உயர் அச்சுறுத்தல் காணப்படும் தரப்பினருக்கு முன்னுரிமை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

வெறுமனே 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. 23 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட தாய்வானில் நாளொன்றுக்கு சுமார் 218 தொற்றாளர்களே இனங்காணப்பட்டுவருவதுடன், 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட புர்கினா பாஸோவில் தற்போது நாளாந்தம் பதவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை பூச்சியம் என்ற நிலையை அடைந்துள்ளது.

சர்வதேச சட்டங்களின் பிரகாரம், எவ்வித வேறுபாடுகளுமின்றி நாட்டுமக்கள் அனைவரும் தரமான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் இயலுமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யவேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தொடக்கத்தில் ஆரம்பமான இந்த வைரஸ் பரவலால் தற்போதுவரை (இன்றைய தினம் வரை) இலங்கையில் 213,396 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் 1,843 பேர் அதனால் உயிரிழந்திருக்கின்றார்கள். தமிழ், சிங்களப்புது வருடத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அலையொன்று உருவாகலாம் என்று இலங்கையின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இலங்கையின் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை முறையான திட்டமிடலின்றி முன்னெடுக்கப்படுவதுடன் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

‘அயல்நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின்கீழ் இந்தியாவினால் 500,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர், கடந்த ஜனவரி 29 ஆம் திகதியிலிருந்தே இலங்கை அதன் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது. அந்தத் தடுப்பூசிகள் கொவிட் – 19 தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெப்ரவரிமாத இறுதியில் இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன. மேலும் 52.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் 10 மில்லியன் அஸ்ரா செனேகா தடுப்பூசிகளை சீரம் நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காக இலங்கை மருந்தாக்கக்கூட்டுத்தாபனம் பதிவுசெய்திருந்தபோதிலும், அது கிடைக்கப்பெறுவதில் தாமதமேற்பட்டது.

அதன் தாமதத்தைத் தொடர்ந்து சினோபாம் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தது. அதேவேளை கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகள் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி இலங்கையிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி மொத்தமாக 925,242 பேர் அஸ்ரா செனேகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளை தற்போதுவரை அவர்களில் 353,789 பேர் மாத்திரமே இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றிருக்கிறார்கள். மேலும் 1,033,028 பேர் சினோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றிருப்பதுடன் அவர்களில் 166 பேர் இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றிருக்கிறார்கள்.

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யக்கூடியவாறான கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையானது தேசிய ரீதியான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமொன்றைத் தயாரிக்கவேண்டும். இந்த நடைமுறை தொடர்பான தகவல்கள் உரியவாறு பொதுமக்களைச் சென்றடைவது அவசியம் என்பதுடன், இதில் முழுமையான வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். இந்தத் திட்டமானது எவ்விதத்திலும் பாரபட்சமானதாகவோ அல்லது எந்தவொரு தரப்பினரையேனும் ஒதுக்கும் வகையிலோ அமையக்ககூடாது. மேலும் நாட்டுமக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் .