முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குணதேவியின் வீட்டினை சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்ட காரணத்தை தெரிவிக்காமல் வாகனத்தில் ஏற்றிச் சென்ற பொலிஸார் அவரை தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என கூறி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.