முல்லைத்தீவில் வயலுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வாழும் மக்கள் பத்து கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் விவசாய செய்கையினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் வயல் காவலுக்கு கூட செல்வதற்கு படையினர் தடை ஏற்படுத்தியுள்ளதால் வயல் நிலங்களை காட்டு யானைகள் அழித்துவிடும் அபாயம் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், களிக்காடு, கோடாலிக்கல்லு, போன்ற வயல் நிலங்களுக்கு செல்வதாயின் படையினரின் காவலரண்களை தாண்டியே செல்லவேண்டியுள்ளது.

இந்நிலையில் முள்ளியவளை-நெடுங்கேணி வீதியில் மதவாளசிங்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினர் விவசாயிகளை வயலுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் இரவு யானைக்காவலுக்கு செல்லும் விவசாயிகளை படையினர் செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளதால் வயல் நிலங்கள் காட்டுயானைகளால் அழிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை விவசாயிகள் பலர் தம்மை வயல் காவலுக்கு விடுமாறு கோரி இராணுவ வீதித்தடைக்கு முன்னால் வீதியில் கூடியுள்ளனர். இந்நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய குறித்த விவசாயிகள் வயல் காவலுக்கு செல்ல ஏற்ப்பாடு செய்து வருகின்றனர்.