முல்லைத்தீவு காணிகளை வனவள திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,803 ஏக்கர் காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்றைய (05) வீரகேசரி வார வௌியீட்டில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் முல்லைத்தீவு மாவட்ட வனவள அலுவலரான எஸ்.ஜி. சுனில் ரஞ்சித், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதனுக்கு அனுப்பியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் காடு ​பேணல் சட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக ஒதுக்க காடுகளான பகுதிகளின் விபரங்களை பொது மக்களுக்கு வழங்குவதுடன் மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15,688 ஏக்கர்களும் நட்டாங்கண்டல் பகுதியில் 678 ஏக்கரும் கையகப்படுத்தப்படவுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் கல்விளான் பகுதியில் 5,006 ஏக்கர் காணியும் அமைதிபுரத்தில் 2,431 ஏக்கர் காணியும் வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடிதத்தின் பிரதி முல்லைத்தீவு, ஒலுமடு வட்டார வன அதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.