முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொரோனா சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும்: நீதிமன்றம் தீர்ப்பு..!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை கொவிட் 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கின் மீதான ஒரு தெளிவான திருத்திய கட்டளை வழங்கப்படும் என மன்று தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 7 பொலிஸ் பிரிவுகளால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீது இன்றையதினம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போதே இந்த திருத்திய கட்டளையை ஆக்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி எஸ் .சரவணராஜா முன்பாக இந்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. இந்த வழக்கில் சிரேஸ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் நடராஜர் காண்டீபன் , கனகரத்தினம் சுகாஸ் ,சுதர்சன் எஸ் தனஞ்சயன் உட்பட முல்லைத்தீவு நீதிமன்றின் ஏனைய சட்டதரணிகளும் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இதன் பின்னர் நீதிமன்று ஏற்கனவே வெளியிட்ட கட்டளை மீதான திருத்திய வெளியீடை இன்று வெளியீடுவதாக கட்டளையில் தெரிவித்துள்ளதோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார விதிகளை கடைபிடித்து மேற்கொள்ளலாம் எனவும் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டாத வண்ணம் மேற்கொள்ளவேண்டும் எனவும் நீதிமன்று கட்டளை ஆக்கியுள்ளது .