ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தின் பங்குதாரராக தாம் தயாரில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியோ அல்லது வேறு எந்த பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணமில்லை என கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
புதிய அமைச்சுகளுடன் இணைந்து, அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்தும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும் அது தொடர்பில் கட்சியினருடன் கலந்துரையாடி குறித்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள தற்போதைய அரசாங்கத்தில் எவ்வகையிலும் பங்குதாரர் ஆவதில்லை கலந்துரையாடலின் போது தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
11 கட்சி உறுப்பினர்களும் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தமது நிலைபாட்டை தெளிவுபடுத்தினர்.
இதன்போது கருத்து வௌயிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,
ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த திடீர் பதவி கிடைத்தமைக்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் தற்போதைய நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை எமக்கில்லை. பசில் ராஜபக்ஸ என்பவர் சால்வை அணியும் ரணில் விக்ரமசிங்க, ரணில் விக்ரமசிங்க என்பவர் Tie-Coat அணியும் பசில் ராஜபக்ஸ என்பதே எனது நிலைப்பாடு
என தெரிவித்தார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தலைவர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோரி வரும் நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்தமை நாட்டிற்கு பாதகமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.