வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – ஐ.நா பிரதிநிதியிடம் ஜனாதிபதி உறுதி

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

நாட்டின் நிதி தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் ஐ.நா. ஒத்துழைப்பை வழங்குவதாக மார்க் ஆன்ட்ரே தெரிவித்தார்.
இதன்போது வடக்கு – கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐ.நா.. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காக எதிர்காலத்தில் நாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் நெருக்கமாக செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.