வாக்குச் சீட்டுகளை அச்சிட தேவையான பணத்தை வழங்க கோரி நிதி அமைச்சுக்கு கடிதம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லது கூடுதல் தொகையை வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்காரணமாக உடனடியாக வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாக கங்கானி லியனகே தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் காலத்தில் பகலில் 35 பொலிஸ் அதிகாரிகளும் இரவில் 28 பொலிஸ் அதிகாரிகளும் தேவைப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சேவையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரச அச்சக அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.