வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு இன்று (02) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் கோரினார்.
மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்துவைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அத்துடன், வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (03) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு களப் பயணம் மேற்கொண்ட இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முதலில் வழிபாகளில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடினார். ஆலய நிர்வாகத்திடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை. அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் கோரினார்.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இதொகாவின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா உட்பட பலர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.