தமிழ் பண்பாட்டு அழிப்பிற்கு எதிராக வடக்கு, கிழக்கில் மாவட்டம் தோறும் போராட்டம்!

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட 7 கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்திற்கு வந்த போதும், பிறிதொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் புறப்பட்டு சென்று விட்டார்.

அத்துடன், தென்னிந்திய திருச்சபையின் பேராயர், வேலன் சுவாமிகள், சைவமகாசபை செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட 22 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன், மற்றும் விதுசன்,  நிஷாந்தன், வேலன் சுவாமி, கலையமுதன் ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.