இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் வைத்து பெற்றுக்கொண்டார்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பார்களா என சபையில் வைத்து கட்சிகளிடம் நேரடியாக கேட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,இது தொடர்பில் டிசம்பர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை நடத்தவும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து புதன்கிழமை (23) இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
ஜனாதிபதி தனது உரையில் தனக்கு முதலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதியின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அழைப்பு தொடர்பில் அதில் காணப்பட வேண்டிய தீர்வு தொடர்பிலும் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பதில் வழங்கினார்.
இதன்போது அவர் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவைப் பார்த்தது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பீர்களா என வினவினார்.
இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல ,உங்கள் பாட்டனாரும் அதிகாரப்பகிர்வை வலியுறுத்தியவர். நானும் எப்போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துபவன். நாம் எப்போதும் அதற்கு தடையாக இருந்ததில்லை. சில கட்சிகள் தான் அதற்கு தடை செயற்பட்டன,தற்போதும் செயற்படுகின்றன.
இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். அவர் 13 பிளஸ் தீர்வு என்றார். இந்த அதிகாரப்பகிர்வுக்கு அவர் சம்மதமா என அவரிடமே கேட்போம் எனக்கூறிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பார்த்து ”அதிகாரப்பகிர்வு வழங்க நீங்கள் சம்மதமா?”எனக்கேட்டார்.
இதற்கு மஹிந்த ராஜபக்ச ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு சிரித்துக்கொண்டு சம்மதம் என்பதற்கு அறிகுறியாக தலையை அசைத்தார். ஆனால் விடாத லக்ஷ்மன் கிரியெல்ல தலையசைத்தால் மட்டும் போதாது.பாராளுமன்றத்தில் எழுந்து நின்று கூற வேண்டும் என்றார். இதனையடுத்து உடனடியாக எழுந்த மஹிந்த ராஜபக்ச எனக்கு சம்மதம் என்றார்.
உடனடியாக பிரதமர் தினேஷ் குணவர்த பக்கம் தனது கவனத்தை திருப்பிய லக்ஷ்மன் கிரியெல்ல பிரதமர் இதற்கு சம்மதிக்கின்றாரா எனக்கேட்டார். ஆனால் எந்தப்பதிலும் கூறாது பிரதமர் தினேஷ் குணவர்த்தன சிரித்தவாறு அமர்ந்திருந்தார். பார்த்தீர்களா பிரதமர் எப்போதும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்.அவர் சம்மதிக்க மாட்டார் என்றார்.
இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோ கணேசனை நோக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ”என்ன மனோ அதிகாரப்பகிர்வுக்கு நீங்கள் சம்மதமா எனக்கேட்டார். ஆம் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம் என மனோகணேசன் பதிலளித்தார்.
அப்படியானால் சுமந்திரன் நீங்களும் சம்மதம் தானே என ஜனாதிபதி ரணில் கேட்டபோது, இது தொடர்பில் வரவு செலவுத்திட்ட விவாதம் முடிந்த பின்னர் ஒரு திகதியை குறிப்பிட்டு கட்சித்தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினால் நல்லது என சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியினரைப்பார்த்தது அப்படியானால் நீங்கள் சம்மதம் தானே என மீண்டும் கேட்டபோது ஒரு உறுப்பினர். அதனை தலைவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.
சரி அப்படியானால் இன்று இந்த விவாதம் முடிவடைவதற்கு உங்கள் தலைவரின் முடிவை எனக்கு கேட்டு சொல்லுங்கள் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கூறியபோதுஇ எழுந்து கருத்துரைத்த மனோகணேசன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் என்பதனால்தான் நாம் அதில் அங்கம் வகிக்கின்றோம் எனக்கூறினார்.
நல்லது அப்படியானால் வரவு செலவுத்திட்ட விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை நடத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.