இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளேன் என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.
இலங்கைக்கு காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் முன்னேற்றத்திற்காக புதிய முதலீடுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வாரம் அரசியல் கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எனக்கு தெளிவுப்படுத்தினார். இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கிய செயற்பாடாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள்,மேல்நாட்டு தமிழர்கள் மற்றும் சிங்கள,முஸ்லிம் சமூகத்தினருடன் அமைதியான முறையில் வாழும் அபிலாசையை அவர் தெளிவுப்படுத்தினார். அத்துடன் இலங்கையில் ஏழ்மை நிலையில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய சேவை விநியோகம் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
மிகமோசமான நிலையில் வாழும் இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு என்னால் இயலுமான ஒத்துழைப்பை வழங்குவேன். நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும்,ஒரு சிலர் உணவை உட்கொள்ளும் வேளையை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி பாரிய முயற்சிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளார். பொருளாதாரத்தை மீட்சிப்படுத்தும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்றார்.