ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு – மணலாறு, மணற்கேணிப் பகுதிக்குரிய தமிழ் மக்கள் சிலர், மணற்கேணிப் பகுதியிலுள்ள தமது காணிகளை துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி தருமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தைக் கோரியுள்ளனர்.
அந்தவகையில் மணற்கேணிப்பகுதி காணி உரிமையாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்து, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரனை இன்று (06) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின்போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் ஊடாக, காணி ஆவணங்களைச் சமர்ப்பித்து, காணிகளைத் துப்பரவு செய்வதற்குரிய கோரிக்கையினை மாவட்டசெயலகத்திற்கு வழங்கும்போது, அதற்குரிய அனுமதியை விரைவாக வழங்க முடியுமென முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மணலாறு – மணற்கேணி கிராமம் என்பது, தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் ஊடறுத்துப் பாய்கின்ற பறையன் ஆற்றிற்கு அருகே அமைந்துள்ள வடக்கிற்குரிய, தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமமாகும்.
மணற்கேணிப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் 36தமிழ் குடும்பங்கள் பூர்வீகமாக இருந்ததாகவும், இதனைவிட குறித்த பகுதியில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு வயல் நிலங்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் 1984ஆம் அண்டிற்கு முன்னர் மணற்கேணிப் பகுதியில் பாரிய கல்நடை மற்றும், விவசாயப் பண்ணைகளுடனும், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் என்பவற்றுடனும் இங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்தார்கள் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு செழிப்பாக வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
இந் நிலையில் தற்போது மணற்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராமங்களில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கள் மிகத் தீவிரமாக முனைப்புப் பெற்றுள்ளன.
இவ்வாறான சூழலில் கடந்த 26.03.2023 அன்று மணற்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களுக்கு கொக்குத்தொடுவாய் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த கள ஆய்வின்போது மணற்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராமங்களில் பௌத்த மயமாக்கல் மற்றும், சிங்கள ஆக்கிரமிப்புமுயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதும் இனங்காணப்பட்டது.
குறிப்பாக மணற்கேணி மற்றும், அதனை அண்டிய எல்லைக்கிராமங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் துப்பரவு செய்யப்படுவதும், தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதும், தமிழர்களின் பூர்வீக தொல்பொருள் எச்சங்கள் உள்ள இடங்கள் விகாரைக்குரிய இடங்களாக கூகுள் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளமையும் இனங்காணப்பட்டிருந்தது.
அதன்படி மணற்கேணி மற்றும் அதனை அண்டிய எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழர்களின் வரலாற்று எச்சங்கள் உள்ள இடங்கள் அக்கரவெலிய விகாரை, வண்ணமடுவ விகாரை, மகாப்பிட்டிய விகாரை என விகாரைக்குரிய இடங்களாக கூகுள் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் இவ்வாறாக பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் மாணலாறு – மணற்கேணி எல்லைக்கிராமத்திற்குரிய மக்கள் சிலரே இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு வருகை தந்து தமது காணிகளைத் துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.
இக் கலந்துரையாடல் தொர்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,
யுத்தம் இடம்பெறுவதற்கு முன்பு மணற்கேணி என்னும் இடத்திலே மத்திய தரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளுடைய உரிமையாளர்களில் சிலர் வருகை தந்திருந்தனர்.
குறித்த காணிகளைத் துப்பரவுசெய்து பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த செயற்பாடுகளை, கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம்தான் மேற்கொள்ளவேண்டும்.
எனவே கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் ஊடாக, காணி ஆவணங்களைச் சமர்ப்பித்து, காணிகளைத் துப்பரவு செய்வதற்குரிய கோரிக்கையினை மாவட்டசெயலகத்திற்கு வழங்கும்போது, நாம் அதற்குரிய அனுமதியை விரைவாக வழங்கி, குறித்த காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இதுதவிர வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமான முறையில் மணற்கேணிப் பகுதியில் காணி துப்பரவு செய்வதான முறைப்பாடும் எமக்குக் கிடைத்துள்ளது.
எனவே நாம் அது சம்பந்தமாகவும், குறித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திற்கு அறிவித்தல் வழங்கி, அவ்வாறான நடவடிக்கைகள் இருப்பின், நாம் அவ்வாறான செயற்பாடுகளுக்கெதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் – என்றார்.