ஆயுதம் தாங்கிய படையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி , இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்