மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட கோரிக்கை

நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.தேர்தலை நடத்த மகா சங்க சபையை கூட்டி சங்க பிரகடனத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி அஸ்கிரி, மல்வத்து, ஆகிய பீடங்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தேசிய பிக்கு முன்னணியினர் வியாழக்கிழமை (02) அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித தேரர் குறிப்பிட்டதாவது,

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசியலமைப்புக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுத்த போது ‘நாட்டில் தேர்தல் இல்லை, தேர்தலுக்கான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக இல்லை’ என குறிப்பிட்டு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் போது நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

வரலாற்றில் பல சம்பவங்கள் அவ்வாறு பதிவாகியுள்ளன. வாக்குரிமையை கோரி மக்கள் வீதிக்கு இறங்கும் போது அரசாங்கம் மிலேட்சத்தனமான தாக்குதலை மேற்கொள்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாட்டு மக்கள் வாக்குரிமை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும். ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.

இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருடம் பிற்போடப்பட்டது. இந்த தேர்தலை மீண்டும் பிற்போட இடமளிக்க முடியாது.

உள்ளுராட்சின்றத் தேர்தலை விரைவாக நடத்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தி மகாநாயக்க தேரர்களிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சகல பௌத்த மத பீடங்களையும் ஒன்றிணைத்து மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும், இரண்டாவது மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற அடிப்படையில் பௌத்த தேரர்களை ஒன்றிணைத்து விசேட கூட்டத்தை நடத்த வேண்டும் மூன்றாவது, செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தை சங்க பிரகடனமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்ளுராட்சிமனற்த் தேர்தலை நடத்துமாறு ஆட்சியாளர்களுக்கு வழங்கும் யோசனைகள் செயற்படுத்தப்படாவிடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு மகாநாயக்க தேரர்கள் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.