இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின் ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன். அத்துடன் இரண்டு நாடுகளும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்ட நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இந்தியன் ஹவ்ஸில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அரசியல், மத, கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். விசேடமாக தர்மசோக சக்கரவர்த்தி பாரத தேசத்தை ஆட்சி செய்த காலத்தில் மஹிந்த தேரர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புத்த மதத்தை எடுத்துவந்தமை இந்நாட்டு மக்களை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் திருப்புமுனையாக அமைந்தது.
அத்துடன் இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல், மத, கலாசாரம்,தொழிநுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளை மேலும் முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும். விசேடமாக கடந்த வருடங்களில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின் ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன்.
குறிப்பாக கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்க இருக்கும் கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்காக அனைத்து வகையிலும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
மேலும் 2017 இல் இலங்கையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த நாட்டுக்கு வந்து வழங்கிய ஆதரவை நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு நாடுகளுக்கிடையில் இடம்பெறும் பொருளாதார மற்றும் தொழிற்நுட்ப ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள பொருளாதார பிரதிபலன்களை மேலும் அபிவிருத்தி செய்துகொண்டு முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்நேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.