இந்தியாவின் திரவ உர இறக்குமதியில் தாமதம் – விவசாய அமைச்சு

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நனோ நைதரசன் திரவ உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் முகவரின் செயற்பாட்டில் சிக்கல் தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் திரவ உரத்தை நாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

​குறித்த முகவர் ஒப்பந்தத்துக்கு இணங்கிச் செயற்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நேரடியாக தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் உரச் செயலாளர் அலுவலகம் மற்றும் அரச உர நிறுவனம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்த வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ​நனோ நைதரசன் திரவ உரத்தை இறக்குமதி செய்யும் போது கடன் பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமை உள்ளிட்ட காரணங்களினால் உள்நாட்டு முகவர்களின் செயற்பாடுகள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய கப்பலிலுள்ள உரத்தை மீள் பரிசோதனைக்குட்படுத்த எச்சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், உர மாதிரியைப் பெறல் மற்றும் தீர்ப்பைப் பெற சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சிந்தாவோ சீவின்ங் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடற்பரப்பில் 70 நாட்களுக்கும் மேலாக சஞ்சரித்திருந்த நிலையிலேயே சிங்கப்பூருக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.