இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.
நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு, இந்த பாடத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
“இலங்கையில் தமிழ், சிங்களத்துக்கு குறையும் மவுசு – சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?”
கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய வைத்த கோரிக்கை
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கை போலீஸ் சேவை அதிகாரிகள் அடங்களாக 70 பேர் பங்குப்பற்றியிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரின் சிறப்பு செய்தி குறிப்பு வாசிக்கப்பட்டது.
இந்தி மொழியின் பிரபலத்தையும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சிறப்பு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தி மொழி கற்பதில் இலங்கை போலீஸ் அதிகாரிகள் கொண்டுள்ள ஆர்வத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வரவேற்றுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசார மற்றும் மொழி உறவுகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலானது என பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் கூறியுள்ளார்;.
இந்த உறவு இந்தி மொழியின் ஊடாக, மேலும் வலுப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி படிப்பைத் தொடர்வதற்கு வருடா வருடம், இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான சந்தர்ப்பத்தை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் 80 அரச பாடசாலைகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு மறைந்த பேராசிரியர் இந்திரா தஸநாயக்க, பாரிய பங்களிப்பு வழங்கியதாகவும், அவர் மறைவின் பின்னர், அவரை கௌரவிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது, இந்திய ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம், இலங்கையுடனான கலாசார உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதை இது வலியுறுத்துகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்தார்.
இலங்கை போலீஸாருக்கு, இந்திய அரசாங்கம் அவ்வப்போது வழங்கி வரும் உதவிகளுக்கு அவர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்ள ஹிந்து பாடத்திட்டம் பாரிய உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை போலீஸாருக்கு, ஹிந்து பாடத்திட்டத்தின் முதல் பகுதி விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கை போலீஸாருக்கு ஏன் இந்தி மொழி அவசியம்?
இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள் என்பதனால், அவர்களுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு இந்தி மொழி கற்பது கட்டாயமானது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
ஆங்கிலம் தெரியாத பெரும்பாலான சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருகின்றமையினால், போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏனைய மொழிகளை கற்பது கட்டாயமானது என அவர் குறிப்பிடுகின்றார்.
”எமது மொழி என்பது மிகவும் முக்கியமானது. இந்தி, கொரியன், ரஷ்யன் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் எமக்கு முக்கியமானது. அதற்கு காரணம், இலங்கைக்கு அனைத்து நாட்டு பிரஜைகளும் வருகைத் தருகின்றனர். குறிப்பாக சுற்றுலாத்துறைக்கு மொழி என்பது மிக முக்கியமானது. வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தவுடன், அவர்களுடன் தொடர்புகளை பேணும் போது, சிலருக்கு ஆங்கிலம் தெரியாது.
அவ்வாறானவர்களுடன் தொடர்புகளை பேணுவது போலீஸாருக்கு மிக கடினமான ஒன்றாகும். அதனால் போலீஸ் திணைக்களத்திலுள்ளவர்கள் அனைத்து மொழிகளையும் கற்பது அவசியமானது என்பதே பொதுவான கருத்தாகும். அதேநேரம், சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை பேணும் போதும், தூதரகங்களுடன் தொடர்புகளை பேணும் போது மொழி கட்டாயமானது.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இலங்கை போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்பிக்கும் வகையிலான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
”போலீஸாருக்கு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மாத்திரம் கற்றால், அது போதுமானதாக இருக்காது. இதற்கு முன்னர் தனிப்பட்ட ரீதியில் வேறு மொழிகளை கற்ற அதிகாரிகள் போலீஸ் திணைக்களத்தின் இருந்தனர். நாம் நிறுவனம் என்ற ரீதியில் போலீஸ் அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்றுக்கொடுப்பது குறித்து தற்போது அவதானம் செலுத்தியுள்ளோம்.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.
- BBC Tamil