இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.
தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
தொடர்ந்து , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார்.
இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, டிசம்பர் மாதத்துடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனையடுத்து அவர் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.இந்நிலையில், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது பரியாவிடையளிப்பதாகவும், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாகவும் இடம்பெறவுள்ளது.
முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சானது, பெல்ஜியத்தில் தூதுவராக கடமையாற்றி வரும் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான தனது நாட்டின் புதிய உயர்ஸ்தானிகராக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.