இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை திங்கட்கிழமை  (26)அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளதோடு, ஒலுவில் துறைமுகம் பாவனைக்கு உகந்தாக இல்லாத  நிலையில், அதன் நுழைவாயில் பிரதேசத்தைச் சூழ மணல் மேடு குவிவதாலும், கடலரிப்பு காரணமாக அயல் கிராமங்களும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாலும், அலைத் தடுப்புச் சுவரின் தவறான நிர்மாணம் காரணமான சீர்கேடுகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும்  அவரது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளையும் மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதாகவும் உயர்ஸ்தானிகர்  தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில்  மீன்பிடித் துறை அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக ஆலோசகர் ரகேஷ் பாண்டே, துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகள் ஆகியோருடனான பேச்சுவார்த்தையொன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.