இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ?

யதீந்திரா?
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பம்பநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன்.

இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்கிணைந்து முன்னெடுக்க முடியவில்லை. ஈழ அரசியலில், ஒற்றுமையின்மை என்னும் நோய், எவ்வாறு தமிழனத்தை பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு வாழும் சாட்சியாகும். ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்களாலேயே, தங்களுக்குள் ஒன்றுபட முடியவில்லையாயின், மற்றவர்கள் அனைவரையும் எவ்வாறு ஒரணியாக கொண்டுவர முடியும்? ஒற்றுமையின்மை என்னும் நோயிலிருந்து அவர்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? இந்தக் கேள்வியுடன்தான், தமிழ் தேசிய அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து செல்கின்றது. வரலாற்றோடு எவ்வித தொடர்புமில்லாத வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது. விரைவில் அது வியாபாரிகள் உகச்சரிக்கும் தமிழ் தேசியமாக உருமாறலாம்.

இனவிடுதலையை வென்றெடுப்பதற்கு ஆயுதப் போராட்டங்களே, ஒரேயொரு வழிமுறையாகும் என்னும் புறச்சூழலில்தான், தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. உலகின் பல பாகங்களிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. நான் இந்த காலகட்டத்தை சேர்ந்தவன் இல்லையென்றாலும், வரலாற்றை உற்று நோக்கும் மாணவன் என்னும் வகையில் விடயங்களை தேடியும், சம்பந்தப்பட்டவர்களோடு உரையாடியும் அறிந்துகொண்டதன் மூலம், இந்த வரலாற்று காலகட்டத்திற்குள் செல்ல முடிந்தது. இன்று முன்னாள் இயக்கங்கள் என்னும் அiமொழியுடன், எதைச் சாதிப்பதற்காக சென்றோம் – இப்போது எந்த நிலையில் இருக்கின்றோம் – இனி எங்களால் என்ன செய்ய முடியும்? என்னும் கேள்விகளுடன், வெறும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், அன்றைய சூழலில், மாபெரும் கனவுகளுடன்தான் இயங்கங்களில் இணைந்து கொண்டவர்கள்.

உண்மையில், அன்றைய சூழலில் இயக்கங்களில் இணைந்து கொண்டவர்கள் பலர், எந்த இயக்கமென்று ஆராய்ந்து இணைந்தவர்களல்லர். அப்படி ஆராய்வதற்கான தேவையும் அப்போது இருந்திருக்கவில்லை. ஏனெனில், இயக்கங்களில் சிறந்தது எது என்னும் கேள்விகளில்லாத காலமது. அனைவருமே விடுதலைக்காக போராடுபவர்கள் என்னும் பெருமை மட்டுமே மேலோங்கியிருந்த காலமது. இயக்கங்களின் தலைமைகளுக்கிடையில் மோதல்களும், பேதங்களும் ஏற்பட்ட போது, அனைத்துமே நிர்மூலமாகியது. சமூதாயத்தை தலைகீழாக புரட்டிப் போடும் கனவுகளோடு சென்றவர்கள், துரோகி, ஒட்டுக்குழுக்கள், மண்டையன் குழுக்கள், காட்டிக்கொடுப்பவர்கள், கூலிப்படைகள் இப்படியான அடைமொழிகளிலிருந்து தப்பிப்பிதற்காக, சமூதாயத்தையேவிட்டே ஓடவேண்டிய துர்பாக்கிய நிலையுருவாகியது. இறுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது.

2015இல், ஒரு சில முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு சம்பந்தனிடம் கோரினர். அப்போது சம்பந்தன் அவர்களுக்கு வழங்கிய பதில் – உங்களிலிருந்துதான், கே.பி வந்தார். உங்களிலிருந்துதான் கருணா வந்தார். நீங்கள் அரச புலனாய்வு பிரிவோடு சேர்ந்து செயற்படுதாக சந்தேகங்கள் இருக்கின்றன – உங்களுக்கு எவ்வாறு, இடம்தரமுடியுமென்று கேட்டிருந்தார். இதிலுள்ள துர்பாக்கியம் என்னவென்றால், சம்பந்தன் அவ்வாறு கூறுகின்ற போது, முன்னாள் இயக்கங்களான கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சம்பந்தனை மறுதலிக்கவோ கண்டிக்கவோ இல்லை. ஒரு கட்சியில் ஆசனங்கள் வழங்குவது – வழங்காமல் விடுவது அந்த கட்சியின் முடிவு. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு கட்டாயம் ஆசனங்கள் வழங்கத்தான் வேண்டுமென்பதல்ல.

ஆனால் அவர்களை நிராகரிப்பதற்கு சொல்லப்படும் காரணத்தில்தான், இந்த சமூதாயத்தின் மோசமான சிந்தனைப் போக்கு வெளிப்படுகின்றது. முன்னர் ஏனைய இயக்கங்களை அரச ஒட்டுக் குழுக்களென்று கூறி, அவமானப்படுத்திய போது, அமைதியாக இருந்த தமிழ் சமூகம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதியாகவே இருந்தது. மொத்தத்தில் இயங்கங்களின் இன்றைய நிலை பூச்சியமாகும். ஏனைய இயக்கங்களுக்கு எது நடந்ததோ, அதுவே இப்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் நடந்திருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பல பிரிவுகளாக இருப்பது போன்றுதான், விடுதலைப் புலியாதரவு புலம்பெயர் தரப்புக்களும் இருக்கின்றன.

இன்று இயக்கங்களின் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைமை எனலாம். எந்த மிதவாத அரசியல் கட்சிகளை புறம்தள்ளி இயக்கங்கள் தோற்றம்பெற்றனவோ – இன்று அதே மிதவாதிகளின் தயவில் – அவர்கள் போடும் ஆசனங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இழிநிலையில்தான் இயக்கங்களின் கதையிருக்கின்றது. தமிழரசு கட்சியின் தயவில் அல்லது விக்கினேஸ்வரன் போன்றவர்களின் தயவில், தங்களின் எதிர்காலத்தை தேடும் நிலையில்தான் இன்று முன்னாள் இயக்கங்களின் நிலையிருக்கின்றது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஒரு காலத்தின் அரசியலை தீர்மானித்தவர்களால், ஏன் இன்றைய ஜனநாயக அரசியலில் சொல்வாக்கு செலுத்தமுடியவில்லை? மிதவாதிகளிடமிருந்த அரசியல் பார்வைகளைவிடவும் செழுமையான அரசியல் பார்வைகள் இயக்கங்களின் தலைமைகளிடம் இருந்தது. அன்றைய சூழலில் மிகவும் ஆழுமைமிக்க தலைவராக கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூட, 1988இல், இடம்பெற்ற, மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. இத்தனைக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமிர்தலிங்கம் ஆதரித்திருந்தார். அந்த ஒப்பந்தத்திற்கு பின்னர்தான், தமிழ் மக்கள் நிம்மதியாக நித்திரைகொள்ள முடிந்ததென்று, உரையாற்றிய, அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு, ஒரு வலுவான தலைமைத்துவத்தை வழங்க முன்வரவில்லை.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டே அமிர்தலிங்கம், அவ்வாறனதொரு முடிவை எடுத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனாலும் ஒரு ஆளுமைமிக்க தலைவர் தனக்கு சரியென்று படும் ஒன்றில் பின்நிற்கக் கூடாது. இந்தப் பி;ன்புலத்தில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று பின்நோக்கி பார்த்தால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முடிவை வரலாறு, நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்தியாவை புறம்தள்ளி, ஈழத்தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும், எக்காலத்திலும் பெற முடியாதென்னும் வரலாற்று உண்மை நிருபிக்கப்பட்டிருக்கின்றது. பத்மநாபா கூறிய ஓரு கருத்தை சில வருடங்களுக்கு முன்னர் எனது கட்டுரையொன்றில், பயன்படுத்தியிருக்கின்றேன். அதாவது, இந்தியா என்பது ஒரு கருங்கல் பாறை. அதனோடு முட்டினால் நமது தலைதான் உடையும். ஈழத் தமிழர் அரசியலை பொறுத்தவரையில் அன்றும் இந்தியா கருங்கற்பாறைதான், இன்றும் கருங்கற்பாறை – என்றுமே பாறைதான். பாறை என்பது பலத்தின் அடைமொழி. அன்று எவருமே முன்வராத நிலையில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று அந்த மாகாணசபையை பாதுகாப்பது தொடர்பில்தான் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்த இடத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அன்றைய முடிவு, வரலாற்றால் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவை எதிர்;த்து போராட்டத்தை தொடர முடியாதென்னும் நிலையில்தான், விடுதலைப் புலிகள் தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பின. இன்று மீளவும் தமிழ் தேசிய அரசியல் இந்தியாவின் தயவிற்காகவே காத்திருக்கின்றது. ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலே இப்போதைக்கு போதுமானதென்னும் நிலைமை உருவாக்கியிருக்கின்றது. ஆனால் இப்போது கூட, முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் பயணிக்க முடியவில்லை. ஒன்றாக இணைந்து மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு யார் காரணமென்றால் அனைத்து இயங்களின் மீதும்தான் விரல் நீள வேண்டும். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் தங்களுக்குள் உடன்பட முடியவில்லையாயின், பின்னர் எதற்காக முன்னாள் இயக்கங்கள் என்னும் அடைமொழி? தியாகங்களால் உருப்பெற்ற வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் முன்னாள் இயக்கங்கள், மிதவாதிகள் போடும் ஆசனங்களை எண்ணிக் கொண்டிருப்பதைவிடவும், தங்களின் இயக்க அடையாள கட்சிகளை கலைத்துவிட்டு செல்லவது பெருமையானது.

இன்றும் இயக்கங்களை பிரதிநித்துவம் செய்பவர்களுக்கு முதன்மையான பொறுப்புண்டு. ஏனெனில் தமிழ் சமூகம் அரசியல்ரீதியில் இன்று வந்திருக்கும் இடத்திற்கு அனைவருக்குமே பொறுப்புண்டு. விடுதலைப் புலிகளுக்கு முதன்மையான பொறுப்புண்டு. உண்மையில் 2009இல் பேரழிவு ஒன்றை சந்தித்த போது, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்போர், சார்பற்ற சுயவிமர்சனமொற்றிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு யாருமே தயாராக இருந்திருக்கவில்லை. இல்லாதவர் இருக்கின்றார் என்று கூறி, அரசியல் மாயைகளை கட்டமைப்பதிலேயே சிலர் கவனம் செலுத்தினர். இதன் விளைவைத்தான் இன்று தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இன்று அனைத்து இயங்கங்களும் ஒரு புள்ளியில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன அதாவது, தியாகங்கள் பெறுமதியற்றுப் போனமைக்கு, இருப்பவர்கள் வெறும் சாட்சியாகியிருக்கின்றனர். இப்போது ஒரு வழிமட்டுமே இருக்கின்றது. அதாவது, முன்னாள் இயக்கங்களின் இப்போதைய தலைமைகள், தங்களது ஒவ்வொரு இயக்கங்களினதும், முடிவுகளுக்காக மாண்டு போனவர்களது தியாகங்களை மதிப்பது உண்மையாயின், அனைவரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும். ஆளுமைமிக்க ஜனநாயக அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டும். முயன்றால், இது முடியாத காரியமல்ல.

ஒரு வரலாற்றியலாளன் என்பவன், வரலாற்றை அதன் போக்கில் சென்று நோக்க வேண்டும் என்பார் வரலாற்றியல் அறிஞர் ஈ.எச்.கார். ஒரு அரசியல் வரலாற்று மாணவன் என்னும்வகையில், கடந்தகால வரலாற்றை அதன் போக்கில் நோக்கினால், இயக்கவழிப் பாதையில் எவருமே புனிதர்களல்லர். அனைவரது பக்கத்திலும் தவறுகள் உண்டு. அந்த தவறுகள் என்னவென்பது அந்த இயக்கங்களில் எஞ்சியிருப்போர்களுக்கு தெரியும். ஆனால் அனைத்து தவறுகளிலிருந்தும் பாடங்களை படிக்க வேண்டிய நிர்பந்தத்தை வரலாறு அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றது. வரலாற்று சுமையை இறக்கி வைப்பது தொடர்பில்தான் அவர்கள் இப்போது சிந்திக்க வேண்டும். வரலாறு மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றது. மனிதர்கள் உருவாக்கிய வரலாற்றின் திசைவழியை, மனிதர்களால் மாற்றியமைக்கவும் முடியும். தமிழ் இயக்கங்களின் வரலாறென்பது, ஒரு புறம் தியாகங்களால் உருப்பெற்ற வரலாறாக இருக்கும் போது, மறுபுறம், அது ஒரு இரத்தக்கறை படிந்த வரலாறு, கொலைகளை ஆராதித்த வரலாறு, மனித உரிமைகளை போற்றாத வரலாறு, அரசியல் தீண்டாமைகளை போற்றிய வரலாறு, குற்றவுணர்விற்கு அச்சம்கொள்ளாத வரலாறு. தமிழ் அரசியல் வரலாற்றின் இந்தப் பக்கமே, மறுபுறம், இயக்கங்களின் தியாகங்களை பெறுமதியற்றதாக்கியிருக்கின்றது. முன்னாள் இயக்கங்கள் அனைத்தும், ஜனநாயக நீரோட்டத்தில் ஒன்றுபட்டால், இந்த வரலாற்று கறைகளை சீர்செய்ய முடியும் .