சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கம் முப்படையினரின் பதவிகளை வெற்றிடமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு ஏனைய திறன்களுக்காக பயிற்சியளிக்கவும் விருப்ப ஓய்வு வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழிந்திருந்தார்.
அதேநேரம், பாதுகாப்பு அமைச்சும் முப்படைகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு பொதுமன்னிப்புக் காலமொன்றை 15 நவம்பர் முதல் 31 டிசம்பர் 2022 வரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், முப்படைகளின் செயற்பாட்டுடன் தொடர்பில்லாதிருக்கும் நபர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்திற்குள் உரிய அறிவிப்புக்களை செய்யாது விட்டால் அந்தந்த சேவைகளிலிருந்து சட்டப்பூர்வ வெளியேற்றப்படத் தகுதியுடையவர்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் ஏனைய தரவரிசைப் படையினர் உட்பட இதுவரை 16, 141 பேர் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 12 அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகளை உடையவர்கள் 96 பேர் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களில் விண்ணப்பங்களைச் அனுப்பியவர்கள் பற்றிய பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் துஷாந்த விஜேசிங்க குறிப்பிடுகையில், 983 விமானப்படை வீரர்கள் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதுடன், 732 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடற்படையால் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் உறுதிப்படுத்தப்படவில்லை.