சர்வ கட்சி மாநாட்டினூடாக 13 க்கு அப்பால் செல்வது சவாலானது – பாக்கியசோதி சரவணமுத்து

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வது சவலானது விடயமாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பு தொடர்பில் இருவேறு பிரதிபலிப்புக்கள் வெளிவந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நோக்கத்தினையும் உள்ளடக்கி சர்வகட்சிகளின் மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு கிடைகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவறாக கொள்ள முடியாது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பதன் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல், அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான தீர்வினை முழுமையாகப் பெற்றுக்கொடுபதற்கு அதியுச்சமாக முனைய வேண்டும்.

இதனைவிடவும் குறித்த மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக கரிசனை கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தியதாகவே இருக்கும்.

அதாவது, அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோரமுடியும்.

அதற்கு, அப்பால் சென்று அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எனக்குள்ளது. ஏனென்றால், தற்போதைய அரசாங்கம் மக்கள் அiணையை முழுமையாக பெறாதவொன்றாகும். அத்துடன், ஸ்திரமான நிலைமையிலும் இல்லை.

ஆகவே, அவ்விதமான அரசாங்கமொன்றால் அரசியலமைப்பினை மாற்றியமைக்க வல்ல தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமானவிடயமாகும். அந்தஅடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதே உசிதமானதாக இருக்கும் என்றார்.