இறக்குமதின் கட்டுப்பாடுகளை அரசும் மத்திய வங்கியும் பரிசீலிக்க வேண்டும் – ஆளும் தரப்பு பா.உ.

இலங்கைக்கு இறக்குமதியாகும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட நூறுவீத உத்தரவாத தொகை குறித்து அரசாங்கமும் மத்திய வங்கியும் பரிசீலிக்க வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் வீடுகளில் மின்விசிறிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இடம்பெற்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தற்போதைய நிலையில் இந்த நடவடிக்கை பாதகமாக அமையலாம் என்றும் கூறினார்.

எனவே கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும் குறித்த பட்டியலில் உள்ள சில பொருட்களை விலக்கி மக்கள் மீதுள்ள சுமையை குறைக்க மத்திய வங்கியின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீதா குமாரசிங்க கேட்டுக்கொண்டார்.

கடந்த 09ஆம் திகதிஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களுக்கு 100 சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு இவ்வாறு 100 சதவீத உத்தரவாத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கம் இழக்கச்செய்வதன் மூலம் செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.