இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வெள்ளிக்கிழமையுடன் அப்பதவியிலிருந்து விடைபெற்றிருப்பதுடன், அடுத்ததாக அவர் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபால் பாக்லே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகக் கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதம் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், அவரது காலப்பகுதியில் இலங்கை – இந்திய இருதரப்பு உறவில் பல்வேறு ‘மைல்கல்’ அடைவுகள் எட்டப்பட்டன.
குறிப்பாக கடந்த ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் அவரது பதவிக்காலத்தில் இடம்பெற்ற இருதரப்பு உறவு சார்ந்த மிகமுக்கிய நகர்வாகும். அதேபோன்று திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, கடந்த ஆண்டு ஜனவரியில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சி என்பனவும் குறிப்பிட்டுக்கூறத்தக்க அடைவுகளாகும். அத்தோடு கோபால் பாக்லேவின் பதவிக்காலத்தில் கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு உதவும் வகையில் சுமார் 25 டொன்களுக்கு மேற்பட்ட மருந்துப்பொருட்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசி, அன்டிஜன் பரிசோனை உபகரணங்கள், திரவ ஒட்சிசன் என்பன இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டன.
மேலும் கோபால் பாக்லே உயர்ஸ்தானிகராகப் பதவிவகித்த காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைப் பதிவுசெய்தன. புதுப்பிக்கத்த சக்திவலு உற்பத்தியில் ஒத்துழைப்பு, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை, வர்த்தக ரீதியான கொடுப்பனவுகளுக்கு இந்திய ரூபாவைப் பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதுமாத்திரமன்றி இலங்கையின் மிகமுக்கிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா எழுச்சியடைந்தது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள செயற்திட்டம் போன்ற அபிவிருத்தித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இருநாடுகளுக்கும் இடையில் பல தலைமுறைகளாக நிலவிவந்த பௌத்தமதம் சார்ந்த தொடர்புகள் 15 மில்லியன் டொலர் நிதியுதவி, இலங்கையிலிருந்து குஷிநகருக்கு சர்வதேச விமானசேவை ஆரம்பிக்கப்பட்டமை, அதனூடாக சுமார் 100 பௌத்த பிக்குகள் குஷிநகருக்கு அழைத்துவரப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீளப்புதுப்பிக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி சென்னை – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான கப்பல் சேவை போன்ற மாறுபட்ட நடவடிக்கைகள் மூலம் இருநாட்டுத் தொடர்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா பொறுப்பேற்றுக்கொள்ளவிருக்கிறார். அவர் தற்போது பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத்தூதுவராகப் பதவிவகித்துவருகின்றார். சுமார் 30 வருடங்களுக்கும் மேலான இராஜதந்திர உறவுகள்சார் அனுபவத்தைக் கொண்டிருக்கும் அவர், பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.