இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்திட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், தி.மு.கவும் உறுதியாக உள்ளது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியம்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்ட இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையால் இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துச் சென்று, சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழில் படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.