இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, அது ஜனநாயக கட்டமைப்புக்களையும் வெகுவாக தாக்கியுள்ளது என்று கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் இரு தசாப்த நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான தேசிய மாநாடு நேற்று புதன்கிழமை (டிச. 14) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலனித்துவ விடுதலைக்குப் பின்னர் இலங்கையில் எழுச்சியடைந்த ஊழலானது ஜனநாயகத்தின் வீழ்ச்சியுடன் சமாந்தரமாக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த நிலைமையானது அரசியல் கட்டமைப்புகள், ஜனநாயக அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் சமூகத்தின் நெறிமுறை வாழ்க்கை ஆகியவற்றின் சிதைவுக்கு காரணமாகியுள்ளது.
சாதாரணமாக, சமூகம் மற்றும் அரசியல் வாழ்வில் ஊழலின் எதிர்மறையான தாக்கம் மிகவும் பரந்துபட்ட அளவில் காணப்படுகின்றது. இந்நிலையானது இலங்கையின் அரசியலில் ஊழலானது ஒரு புற்றுநோயாக உள்ளது. அதேநேரம், இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயகமயமாக்கலுக்கான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
1990களின் முற்பகுதியில் இருந்து ஊழலை ஒழிப்பது தொடர்பில் பொது அக்கறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஊழல் ஒழிப்பு என்பது பொதுவானதொரு அரசியல் கோஷமாக மாறியுள்ளது.
இருப்பினும், இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்காக சட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும், அரசியல் பிரசாரம் மூலமாகவும் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இடையறாத தோல்விகளை மட்டுமே விளைவாகக் கொண்டிருக்கின்றன.
இதனால் தற்போது ஊழலுக்கு எதிரான போராட்டக் கோஷம் பொதுமக்களின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழந்துவிட்ட நிலையே காணப்படுகின்றது. ஆனால், அண்மைக் காலத்தில் இலங்கை பிரஜையின் அரகலய போராட்டத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. அதிலொன்று, முறைமை மாற்றம்; மற்றையது, இலங்கை குடிமக்களை உள்ளடக்கிய ஊழலற்ற அரசியல் கலாசாரம் ஆகியனவாகும்.
அத்துடன், ஊழலுக்கு இடமில்லாத புதிய அரசியல் கலாசாரத்துக்கான போராட்டத்தை, அரசியல் வர்க்கத்தை விடவும் எமது நாட்டின் குடிமக்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை விட்டுவிட முடியாது. மேலும், ஊழலில் அரசியல்வாதிகளே முக்கியஸ்தர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்பதால் நாட்டின் அரசியலில் ஊழல் என்பது ஜனநாயக அரசியலின் அமைப்புக்கொள்கையாக மாறிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது, அரச நிறுவனங்கள், கலாசாரங்கள், தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நடைமுறைகளுக்குள் ஊடுருவியுள்ளது. இதனாலேயே ஒவ்வொரு புதிய அரசாங்கமும் ஊழல்வாதிகளின் கூட்டாளிகள் என்ற சந்தேகத்துக்குரிய நற்பெயரை கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.
ஊழலற்றவர்களின் கூட்டணி என்ற அரசியல் தரப்பின் இணைவானது புதிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கூட்டமாகும். அதுமட்டுமன்றி, ஊழலின் பங்காளிகளாக அரசியல் வர்க்கம், அதிகாரத்துவ வர்க்கம் மற்றும் பெருவணிக வர்க்கத்துறையினர் உள்ளிட்டவர்களை கொண்ட முத்தரப்புக் கூட்டணியாகும். ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் இதனை புரிந்துகொண்டாலேயே அவற்றை அடையாளம் கண்டு, முதுகெலும்பை உடைத்தெறிய முடியும் என்றார்.