இலங்கையின் கடன் தொகையை அடுத்த வாரம் அறிவிப்பதாக பிரதமர் தெரிவிப்பு

இலங்கை எவ்வளவு கடனை செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் தகவல்களை சேகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவருக்கு ஒருவர் விமர்சனங்களை முன்வைக்காமல், நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு பிரதமர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் கடன் தொகை தொடர்பில் பிரதமரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இலங்கை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என அவர் வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையை அடுத்த வாரமளவில் தயாரிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சில தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் சில தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்ட பிரதமர், இதன் காரணமாக தன்னால் சரியான தொகையை உடனடியாகக் கூற முடியவில்லை என தெரிவித்தார்.

கடன் தொகை 10 பில்லியனாக இருந்தாலும் அதனை வழங்குவதற்கு ஒரு மில்லியன் கூட எம்மிடம் இல்லை என பிரதமர் கூறினார்.

எனவே தான் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த அவர், விரைவில் அத்தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்கவுள்ளதாகவும் கூறினார்.

கடன்களை தற்போதைக்கு மீள செலுத்துவதில்லை என கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.