இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது என்று அரசியல் ஆய்வாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘இலங்கையின் மறுசீரமைப்புக்கான அம்ச கோரிக்கைகள்’ அடங்கிய ஆவணத்தை அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு கையளித்து விளக்கமளிக்கும் செயற்பாடுகள் கடந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, 43ஆவது படையணி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுடன் சந்திப்புக்களும் நடைபெற்றன.
இந்த சந்திப்புக்களில் மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் அழைப்பாளர் குழு உறுப்பினர்களான விக்டர் ஐவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த செயற்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையானது வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. அதேநேரம் பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாமல், சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இலங்கை பின்னடைந்தே காணப்படுகின்றது.
இந்த எல்லா விடயங்களிலும் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது.
இலங்கை இப்போது இருக்கும் நிலைமையில் இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. இந்த சமகாலத்து பிரஜைகளான இலங்கையர்கள் அனைவருக்குமே பாரியதொரு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அது நாட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பாகும்.
இலங்கைச் சமூகம் இன்னும் பழமைவாத எண்ணக்கருக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை.
இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள வர்த்தக நிலுவை, சென்மதி நிலுவையை சரிசெய்துவிடுவதனால் மாத்திரமே இந்த பழமைவாத சிந்தனைகளை சீர்செய்துவிட முடியாது.
இதற்கு திறந்த கலந்துரையாடலும் உறுதியான தீர்வு முன்வைப்புகளும் வேண்டும்.
அத்தகைய உரையாடல் புள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய 13 அம்ச முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமொன்றை தயாரித்து, நாங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பேசி வருகிறோம்.
நாம் சந்தித்த அனைத்துக் கட்சிகளும் மறுசீரமைப்பு சார்ந்து நாங்கள் முன்வைக்கும் யோசனைகளை பரிசீலிக்க தயாராகவே உள்ளன. எனவே, இதுதான் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு சிறந்த தருணமாக நான் பார்க்கிறேன் என்றார்.
இதேவேளை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.