இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கை உருவாக்கத்துக்கான உத்வேகத்தை அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தகப்பேரவையின் வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இவ்வருடம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.
இவ்வேளையில் அமெரிக்காவும் இலங்கையில் இயங்கிவரும் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் இலங்கை பொருளாதாரத்தின்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கம் தொடர்பில் நினைவுகூறவிரும்புகின்றேன்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவானது மக்கள், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
எமது இருநாடுகளும் சுமார் 7 தசாப்தகாலமாக பொருளாதார அபிவிருத்தி முதல் தேசிய பாதுகாப்பு வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் விரிவாக ஒன்றிணைந்து பணியாற்றிவந்திருப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவும் பரஸ்பர நன்மதிப்பும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்ததன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் முக்கிய பங்காற்றியுள்ளது.
குறிப்பாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட அமெரிக்க வர்த்தகப்பேரவையானது இலங்கையில் அமெரிக்க தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியவற்றைப் பிரதான நோக்கங்களாகக்கொண்டு இயங்கிவருகின்றது. அதன்படி கலந்துரையாடல்கள், ஆலோசனை வழங்கல்கள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்க வர்த்தகப்பேரவை உதவிகளை வழங்கியுள்ளது.
குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கைகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் தற்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்புக்கள் குறித்த ஆலோசனைகளையும் அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருக்கின்றுது.
இதனை முன்னிறுத்திய பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது.
ஆனால் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் இலங்கை மற்றும் அமெரிக்க வணிகங்களுக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாவதற்கும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைவதற்கும், பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதற்கும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.