இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இம்முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் விசேட ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை தென்னாபிரிக்காவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஒத்துழைப்புக்களை சுவிற்ஸர்லாந்தும், இதற்குரிய நிதி உதவியை ஜப்பானும் வழங்குவதாக அறியமுடிகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபக்ளெர் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.