பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்துவதை முன்னிறுத்தியும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (2) நடைபெற்றது.
இதன்போது மிகவும் சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காகவும் நாட்டின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி வழங்கிய உதவிகளுக்காகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார்.
அதேவேளை டிஜிட்டல்மயமாக்கல், விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கும் நிதியியல்துறை உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் அமைச்சர் அலி சப்ரி கோரிக்கைவிடுத்தார்.
அதற்குப் பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவா, மிகமோசமான பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், மீட்சிக்கான வலுவான அடித்தளத்தை இடுவதற்கும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியதுடன் பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.