இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு- ஜஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டனை தளமாக கொண்ட இலங்கை சட்டத்தரணி ஜயராஜ் பலிகவர்த்தனவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜயராஜ் பலிகவர்த்தன ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜஸ்மின் சூக்கா தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பக்கச்சார்பானவர் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட ஜயராஜ் பலிகவர்த்தன 47 தூதரகங்களிற்கு அதனை அனுப்பிவைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரிட்டனின் 2018 தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தரவு பாதுகாப்பு மனுவொன்றை தாக்கல் செய்த ஜஸ்மின் சூக்கா தனது தனிப்பட்ட கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இயல்பாகவே இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை, இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர் என்ற அடிப்படையில் எனது பணிகளிற்கு அவதூறு கற்பிக்கும் நோக்கத்தை கொண்டவை என ஜஸ்மின் சூக்கா நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாவலர்களை பயங்கரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தும் நடவடிக்கைளில் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்குமுறை அரசாங்கங்கள் ஈடுபட்டுள்ளன என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கையை சேர்ந்த சட்டத்தரணி தான் தனது அறிக்கையில் ஜஸ்மின் சூக்காவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை நீக்க மறுத்ததுடன் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இறுதியில் அவர் ஜஸ்மின் சூக்காவிற்கு குறிப்பிடத்தக்க இழப்பீட்டினை செலுத்த இணங்கியுள்ளதுடன் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதற்கும் இணங்கியுள்ளார்.

நீதிமன்றம் அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இணையத்தில் மன்னிப்பு கோரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.