இலங்கை ஓர் ‘தோல்வியடைந்த அரசாக’ மாறியுள்ளது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தபோது வரவேற்கத்தக்க பல்வேறு சமூகக்காரணிகள் தென்பட்ட போதிலும், சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் இலங்கை ஓர் ‘தோல்வியடைந்த அரசாக’ மாறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

‘ஒரு நாடு குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு 75 வருடங்கள் என்பது மிகநீண்டகாலமாகும். அந்தவகையில் காலனித்துவ ஆட்சியாளர்கள் சுமார் 450 வருடங்களாக நாட்டை சீரழித்த பின்னரும்கூட, இலங்கை சுதந்திரமடைந்தபோது பெரிதும் வரவேற்கத்தக்கவாறான பல்வேறு சமூக – பொருளாதாரக்காரணிகள் தென்பட்டன.

ஆனால் சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இலங்கை ஓர் தோல்வியடைந்த அரசாக மாறியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியப்பேரவை மற்றும் ஆசிய ஊடகக்கற்கைகள் கல்லூரி ஆகியவற்றினால் நிகழ்நிலை முறைமையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘யுனெஸ்கோவுக்கான தூதுவர் மதன்ஜீத் சிங் ஞாபகார்த்த உரை’ நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டின் உள்ளக விவகாரங்களைக் கையாள்வதற்கான இயலுமையை நாம் இழந்திருக்கின்றோம்’ என்றும் அவர் இதன்போது விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் ‘கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலையில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது உலகின் எந்தவொரு நாடும் மிக அரிதாக முகங்கொடுக்கக்கூடிய சூழ்நிலையாகும். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கின்றது.

விவசாயத்துறையும் சிறிய மற்றும் நடுத்தரளவிலான கைத்தொழில்களும் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. சுற்றுலாத்துறை வீழ்ச்சிகண்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பாரியளவிலான ஊழல்மோசடிகளும் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கத்தின் தோல்வியுமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக்காரணங்களாகும் என்றும் தெரிவித்துள்ளார்.