இலங்கை முகங்கொடுக்கும் சவால்களை முறியடிக்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளடங்கலாகப் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்தார்.

அத்தோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அவசியமான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.